ஏன் நீங்கள் நல்ல தலைவராக வேண்டும்?

​ஏன் நீங்கள் நல்ல தலைவராக வேண்டும்?

           நீங்கள் நல்ல தலைவராக உருவெடுக்கும் பொழுது உங்கள் தொழிலிலோ அல்லது உங்கள் வேலையிலோ என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அல்லது என்ன அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை உங்களால் எளிதில் அடைய முடியும். நீங்கள் நல்ல தலைவராக உருவெடுக்கும் பொழுது உங்கள் அலுவலகத்திலும் மற்றும் வீட்டிலும் உறவுகள் மிகச் சிறப்பாக அமையும். வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்க முடியும் அல்லது சமுதாயத்தில், அரசியல் ரீதியாக, நீங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் தலைமைப் பண்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

நிறுவனத்தின் வழிகாட்டியாய் இருங்கள்

          உங்களது நிறுவனத்திலோ அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்திலோ புதிய திட்டங்கள் மிகப்பெரிய இலக்குகள் கடினமான வேலைகள் ஆகியவற்றை மற்றவர்களை செய்யச் சொல்லும் முன்பு நீங்கள் முன்னின்று அந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் பொழுது மற்றவர்களுக்கு உங்கள் மீது மிகப் பெரிய நம்பிக்கை வரும். தலைமை என்பது பதவி அல்ல அது நமக்கு அளிக்கப் பட்டிருக்கும் பொறுப்பு என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

குழுவாக செயல்பட ஊக்கம் அளித்தல்

தனி மரம் தோப்பாகாது என்று கூறுவார்கள் தனித்திருந்து செய்யும் காரியங்களை விட குழுவாக செய்யும் போது அதனுடைய வீரியம் அதிகம். குழுவாக செயல்படும் பொழுது ஒரு வேலையை விரைவாகவும் எளிதாகவும் முடிக்க முடியும் எனவே தலைவர் எந்த ஒரு  வேலையையும் குழுவாக இணைந்து ஒற்றுமையுடன் செயல் படுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். அதனால் தான் கடவுள் வழிபாடுகளிலும் கூட்டு வழிபாட்டுக்கு அதிக சக்தி உள்ளது என்பதை கூறியிருக்கிறார்கள். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பு ஒரு நிறுவனம் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் குழுவாக செயல்பட்டு வெற்றி இலக்கை எளிதில் அடையலாம்.

             குழுவாக செயல்படும் போது தோல்வி வருமாயின் அதற்குத் தலைவர் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் வெற்றி பெறும்போது வெற்றிக்கு குழுவிலுள்ள உறுப்பினர்களே காரணம் என்று பாராட்டுதல்களை வழங்க வேண்டும். அவ்வாறு செயல்படும் பொழுது தான் உண்மையான தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

encourage team work

Encourage team work

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம்

            நாம் எந்தத் துறையில் இருந்தாலும் எத்தகைய பணியில் இருந்தாலும் நாம் அதை சீரும் சிறப்புமாக செய்ய வேண்டுமென்றால் புதிது புதிதாக ஒவ்வொரு நாளும் மாணவர்களைப் போல் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தற்பொழுது வேகமாக மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் தினந்தோறும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உதாரணமாக தொழில் துறையை எடுத்துக் கொண்டோமேயானால் மனிதவள மேம்பாடு ஆகட்டும் விற்பனை, சந்தைப்படுத்துதல், மேலாண்மை ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் தினந்தோறும் நடந்து கொண்டு உள்ளன. தலைவரே புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் நிறுவனத்தில் நம்முடன் உடன் பணிபுரிவோர் எவ்வாறு கற்றுக் கொள்வார்கள்?. தினமும் நடக்கக் கூடிய நிகழ்வுகளை/ மாற்றங்களை அறிந்து கொள்வதன் மூலமும் புதிய புதிய தொழில் நுட்பங்களை நாம் புரிந்து கொள்வதின் மூலம் நிறுவனத்திற்கு எது தேவையோ அதனை பயன்படுத்தி மேலும் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு எளிதான விஷயமாக நமக்கு அமையும்.

​தலைவருக்கான நான்கு முக்கிய பண்புகள்


  • எந்த ஒரு சூழ்நிலையிலும் நேர்மையாக செயல்படுதல்.
  • ​கொடுத்த வாக்கினை எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாது காப்பாற்றுதல்.
  • ​மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அல்லது எடுத்துக்காட்டாக செயல்படுதல்.
  • ​​ தலைவர்களை உருவாக்குதல்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுதல்

           விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதும் கருத்துக்களை பகுத்து ஆய்வு செய்வதும் தலைமைப் பண்புக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை நேர்மறையாக பயன்படுத்திக் கொள்ளும் பொழுது நமது வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். என்ன செய்துள்ளீர்கள் எப்படி செய்துள்ளீர்கள் அதில் எது சரி எது தவறு போன்றவற்றை கேட்டு பெறுவதின் மூலம் உங்களின் செயல் திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். தவறுகளை திருத்திக் கொள்ளலாம். சீரிய செயல் நோக்கி செயல்படலாம்.

                 மேற்கூறிய விஷயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு தலைமைப் பொறுப்பு என்பது தானாக தேடி வரும்.  நல்ல தலைவர்களுக்கு மிகப் பெரும் பற்றாக்குறை உள்ளது. இன்றைய உலகிற்கு அதிகமான நல்ல தலைவர்கள் தேவைப் படுகின்றனர். நீங்கள் தலைவராக உருவெடுத்து சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் ஆற்றல் உங்களிடம் உள்ளது.Leave a Reply