fbpx

தொழில் முனைவு – தொடும் தூரத்தில்…!!!

தொழில் முனைவு – தொடும் தூரத்தில்…!!!

தொழில் தொடக்கம் ஒரு முன்னோட்டம்

இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு மனிதன் தனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மிகுந்த பிரயத்தனத்துடன் பல முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறான். அந்த வகையில், அவனது தேவைக்கான பொருள் ஈட்டும் படலம் எங்கும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கிறது.

முதலில் தான் இருந்த இடத்தில் இருக்கும் தொழிலைச் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டினான். அதன் பின்னர் தான் ஈட்டிய பொருளில் தனது தேவை போக மிச்சம் இருப்பதை பிறருடன் பகிர்ந்து கொண்டான். அது பண்டமாற்று முறை என்று அழைக்கப்பட்டது.

காலப்போக்கில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்க பொருள் ஈட்டளின் இயல்புத் தன்மைகளும் மாறத் தொடங்கின.

இறுதியில் பணம் என்ற ஒரு பொதுவான பொருளை உருவாக்கினான். பொற்காசுகலாக இருந்த பணம் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் மூலம் இணையப் பரிவர்த்தனை வரை வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

தொழில் வளர்ச்சித் தொடக்கம்

“மாற்றம் ஒன்றே மாறாதது” – மனிதனின் தேவைகளில் மாற்றம் நிகழத் தொடங்கவும் அதற்கான தேடலிலும் பலதரப்பட்ட மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. பொருள் ஈட்டளுக்கென்று பிரத்தியேக வழிமுறைகளையும், அணுகுமுறைகளையும் வகுத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினான்.

அரசு அலுவலகங்களில் தங்களுக்கான ஒரு இடத்தைப் பெற்று அதில் பணியாற்ற விரும்பிய மனிதர்கள் கடந்த நூற்றாண்டு தொடங்கி தகவல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியில் மயங்கி அது சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிவதை விரும்பினர். தற்போதைய சூழலில் அதன்மீது இருந்த மோகமும் குறையத் தொடங்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். புதுமையை விரும்பும் மனநிலையைக் கட்டமைத்துக்கொண்டு இருக்கின்ற இன்றைய இளைஞர்கள் “ஸ்டார்ட் – அப்” அதாவது “புதுயுகத் தொழில்முனைவு” என்னும் புதிய சொல்லாடலுக்குள் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்றனர். பணிபுரிவதைக் காட்டிலும் தங்களுக்கான ஒரு தொழிலைத் தேர்வு செய்து அதில் புதுமையைப் புகுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போதைய காலம் அறிவுசார் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நிறைந்த காலம். எந்த ஒரு புதுயுகத் தொழில்சார் முன்னேற்றத்திற்கும் புத்தாக்கம் (Innovation) மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்தப் புத்தாக்கத்தின் அடிப்படையில் தான் இன்றைய காலத்தின் தொழில் துறைகள் வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

தொழில் முனைவிற்கான வழிமுறைகள்

தொழில்முனைவின் சாராம்சங்கள் பற்றிப் பார்க்கும் முன்னர் புதுயுகத் தொழில் முனைவு என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். தொழில்முனைவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன் அதற்குப் பின் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றது. ஒன்று பாரம்பரிய முறையிலான பழைய யுகத் தொழில் முனைவு, மற்றது புதுயுகத் தொழில் முனைவு. தொழில்நுட்பத்துடன் இணைந்து பரிணாம வளர்ச்சி அடைந்த பாராம்பரிய தொழிலே புதுயுகத் தொழில்முனைவு என்றானது.

அறிவுசார் புத்தாக்கம் (Innovation), தொழிலின் வளரும் தன்மை (Scalability), தொழில்நுட்பம் (Technology) ஆகியவை இணைந்ததே இன்றைய புது யுகத் தொழில் முனைவு என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில் முயற்சிகளின் வலுவானது சொத்துக்களை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அந்தப் பிரத்தியேக ஐடியாக்களின் சக்தியை வைத்தே மதிப்பிடப்படுகிறது.

மெட்ரோ நகரங்களைக் கடந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கரூர் போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் இந்தப் புதுயுகத் தொழில் முனைவு தனது கிளை பரப்பி விரிந்து நிற்கிறது என்றால் அதற்குப் புத்தாக்கமே (Innovation) அடிப்படை காரணியாகத் திகழ்கின்றது.

இன்றைய சூழலில், நீங்கள் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறீர்கள் அதற்கான அறிவாற்றலும் அதைத் தொடங்கி நடத்த வேண்டும் என்ற பேரார்வமும் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக அந்தத் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்த முடியும். ஆனால், அதற்கு முன் நீங்கள் உங்களை எல்லா வகையிலும் தயாரிக்க வேண்டி இருக்கிறது. பல்வேறுகட்ட வர்த்தக ஆலோசனைகள் தேவைப்படுகிறது. இவற்றை எல்லாம் செய்தால் உடனே வெற்றி கிடைத்து விடுமா என்றால் அதுவும் இல்லை. தடைகள் பல வந்து சென்றுகொண்டு தான் இருக்கும். எது எப்படி ஆகினும் தடைகளைத் தகர்த்த பல தொழில்சார் முன்னேற்றங்கள் நகரின் கடைக்கோடி வரை இன்றும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

அத்தகைய தடை கடந்த தொழில் முனைவை எவ்வாறு மேற்கொள்வது, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், உணவு, சேவை போன்ற பல்வேறு தொழில் பிரிவுகளில் எத்தகைய வாய்ப்புகள் இருக்கின்றன?, அந்த வாய்ப்புக்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?, தமிழகத்தில் புதுயுகத் தொழில் முனைவாளருக்கான சூழல் தகவமைவுகள் எவ்வாறு இருக்கிறது அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?, தொழில்முனைவின் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் என்ன? என்பது பற்றி எல்லாம் இனி வரும் வர்த்தக ஆலோசகரின் எழுத்து வடிவில் பார்க்கலாம்.