fbpx

தமிழகத்தில் தொழில்முனைவு – எப்படி நடக்கிறது?

தமிழகத்தில் தொழில்முனைவு – எப்படி நடக்கிறது?

தொழில்முனைவில் கால் பதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் சரி, அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் சரி உடனடியாக பெட்டி படுக்கைகளுடன் மெட்ரோ சிட்டியை நோக்கிப் படை எடுக்கும் அநேகர் சூழ் உலகில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

தொழில் முனைவின் ஆழத்தைத் பார்க்க விரும்புவோர் அது சார்ந்த ஆளுமைகளின் ஆதிக்கம் நிறைந்த சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களைத் தேடிச் செல்வதில் தவறேதும் இல்லை, ஏனெனில், அந்த நகரங்கள் நிச்சயம் அது சார்ந்த கதைகளைச் சொல்லக் கூடியவையே. ஆனால், அவை யாவும் பூர்வீக மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து பிரிந்து சென்று தொழில் தொடங்கி இருக்கும் மனிதர்களின் கதைகளாகத் தான் இருக்கும். தமிழகத் தொழில்முனைவின் ஆணி வேரை ஆராய வேண்டுமாயின் மதுரை, தஞ்சாவூர், திருச்சி, ராமேஸ்வரம்,ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர், காஞ்சிபுரம், கரூர் போன்ற பாரம்பரிய தொழில் முனைவு மாவட்டங்களையே அலசிப்பார்க்க வேண்டும்.

மனித குலத்தின் வரலாறு தொடங்கிய காலம் தொட்டு இந்தத் தொழில் செய்தல் என்னும் வார்த்தை புழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தந்த ஊர்களுக்கென்று பிரத்தியேக உற்பத்திப் பொருட்களையும் வணிக முறைகளையும் கையாண்டனர். தொன்றுதொட்டு அதே தொழிலைச் செய்து வாணிபம் செய்து வருவதனைக் கொண்டு அதையே அந்த ஊர்களின் பாரம்பரியத் தொழில் என்று ஆக்கிவிட்டனர். இப்படியாய் அந்தந்த ஊர்களுக்கென்று ஒரு பாரம்பரிய தொழில் அமைந்து விட்டது.

தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கவே அந்தந்த ஊர்களின் தொழில்சார் வளர்ச்சியும் அதிகரித்தது. உற்பத்தித் திறனை மேம்படுத்த புதிய யுக்திகளையும் தொழில்நுட்பத்தையும்,ஆற்றல் அதிகம்கொண்ட இயந்திரங்களையும் பயன்படுத்தத் தொடங்கினர். தொழில்நுட்பத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்ட வர்த்தகங்கள் தன்னை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொண்டது. இயந்திரங்களின் அதிகரிப்பு எண்ணற்ற நன்மைகளைச் செய்த போதும் அதன்மூலமும் சில பிழைகளும் சேதங்களும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

எது எப்படியாக இருப்பினும் இன்றைய கணினி யுகத்தில் தொழில்நுட்பம் அல்லாத ஒரு தொழில் வளர்ச்சியைக் காண்பது அரிது என்றாலும் தமிழகத்தின் பாரம்பரிய தொழில் மாவட்டங்கள் தொழில் நுட்பத்திற்குள் தன்னை முழுதும் புகுத்தி விட்டதா என்று கேட்டால் அதுவும் கேள்விகுறி தான். அப்படியானதொரு மாற்றம் நிகழ்ந்து வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருந்தால் அந்த மெட்ரோ நகரங்களுக்கான புலம்பெயர்வு என்பது பெரும் அளவில் நடக்காமல் இருந்து இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் பாரம்பரிய தொழில்களின் நிலை என்ன…?? அதனை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேறு ஏதும் யுக்திகள் கையாளப் பட்டிருக்கிறதா…???படுகிறதா….?? தொழில்சார் தகவமைவின் நிலைப்பாடுகள் என்ன என்ன, அதன்மூலம் தொழில் வளர்ச்சிகள் எப்படி இருக்கின்றது என்பது பற்றிப் பார்ப்போம்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பவர்களாக தமிழகத்தின் தொழில் முனைவாளர்கள் இருக்கிறார்கள். திறனும் ஆற்றலும் நிறைந்த வணிகர்களையும், செய்த பொருட்களைக் கடல் கடந்தும் விற்கக் கூடிய சர்வதேச துறைமுகங்களையும், அதற்கான தகவல் தொடர்புகளையும் தன்னகத்தே கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதன் மூலமாக, விவசாயம், வாகன உற்பத்தி மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு, உணவு, சேவை போன்ற பல்வேறு தொழில் துறைகள் வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

அதிக அளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை உற்பத்தியில் தமிழகம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது மறுக்கப்படவியலாத உண்மை. வேளாண்மை என்று வரும் பட்சத்தில் விவசாயம் தவிர்த்து ஆடு மாடு கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளின் பண்ணை சார்ந்த தொழில் வளர்ச்சிகளும் அடங்கும். வேளாண் தொழில் தொடங்குவதற்கென்று பல்வேறு நிதி உதவிகள் அரசாலும், நிறுவனங்களாலும் வழங்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அது பற்றி விரிவாக பின்வரும் கட்டுரைகளில் விரிவாகக் காணலாம்.

வேளாண்மையை அடுத்து பாரம்பரியமான தொழில் என்றால் அது நெசவுத் தொழில். பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை மல்லி போன்று பவானி என்றால் நினைவுக்கு வருவது அதன் ஜமக்காளம் (தரை விரிப்பு) தான். 1947 ம் ஆண்டே ஜமக்காளத்திற்கான காப்புரிமையை பவானி பெற்று விட்டது. இன்றைய சூழலில் விசைத்தறி நெசவு அதிகம் வளர்ந்துவிட்டது.  அதன் தாக்கத்தால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மறுக்க முடியாது. அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த அவர்களின் பொருட்கள் அடங்கிய செயலியை அறிமுகம் செய்து அதன்மூலம் அவர்களுக்கென்று ஒரு வருமானத்தை ஏற்படுத்தித் தருவதன் மூலம் அவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற வழி செய்து புதியதொரு தொழில் முனைவை ஏற்படுத்தலாம்.

நம்மை சுற்றியுள்ள பல பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் எப்படி மாறுபட்ட புதுமையான தீர்வுகளைத் தருகிறோம் என்பதைப் பொறுத்தே தொழில் முனைவு வெற்றி பெறுகிறது.பாரம்பரியமான தொழில்களை அதன் சிறப்புக் குறையாமல் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல தொழில்நுட்பத்தின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது. அதனைக் கைகொண்டு நமது ஊரின் சிறப்பாகக் கருதப்படும் பொருட்களை உலகம் அறியும் வண்ணம் செய்து விடலாம் என்பதில் துளியும் ஐயமில்லை.

பாரம்பரிய தொழில் பற்றிய மேலோட்டத்தை கடந்து ஒவ்வொரு தொழில் பற்றிய தெளிவான விளக்கத்தையும், அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அந்த தொழிலுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் பற்றியும் அடுத்த கட்டுரையில் காண்போம்.

Kindly check the following Links for Business Ideas:

Business ideas in Tamil |வணிக பயிற்சியாளர்| Business Consultant | (thamizharasu.com)

Best business in Tamilnadu | Business Coach | Business Consultant (thamizharasu.com)

Spread the love